வெள்ளி, 22 டிசம்பர், 2017

புறப்படு நண்பா

புறப்படு நண்பா புத்துயிர் கொண்டு
பிறந்த பயனுக்கு சிறிதேனும் செய்வோம்
எனக்கென்ன வந்ததென்ற
எண்ணம் களைவோம்
விழித்தவாறே உறக்கம் வேண்டாம்
நீயும் நானும் இணைந்த சமுதாயம்
நீக்கிடுவோம் சாதிமத நிறங்கள்
சிறுதுளியே பெருவெள்ளம்
தூர் வார துணை நிற்போம்
பேச்சை விடுத்து செயலில் முனைவோம்
களைவெட்டி கொண்டு களையெடுக்க
கங்கணம் கொள்வோம் கொதித்தெழு
இனிவரும் நாட்களில் இதைமட்டும் செய்வோம்
இனியதொரு உலகினை இளையவர்க்கு பரிசளிப்போம் !

எம்மோடு ஒன்றியது

விடியலில் வீசிடும் குளிர்காற்று
உதிக்கும் கதிரவனின் செந்நிறக் கீற்று
கூட்டைத் துறந்த புள்ளினங்கள் ஓசை
மார்கழித் திங்களில் மாக்கோலம் நடுவே பூசணிப்பூ
ஏர்க்காலில் காளைகள் பூட்டி ஏய் என்ற ஓசை
என்றுமே எங்கள் கிராம
வாழ்க்கை
எளிதானது எம்மோடு ஒன்றியது !

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கடவுளின் படைப்பினிலே

மணம் வீசும் மல்லிகை
மழலைப் பேச்சின் மகிழ்வு
மலை முகட்டின் மேகமூட்டம்
மண்ணின் வாசம்
பனிபடரும் புல்நுனி
பசுமைப் புல்வெளி
பரந்த மணலாய் பாலைவனம்
ஆகாய வெளியில் வண்ணக்கோலம்
ஆற்றோடு உறவாடும் மீன்குஞ்சு
காலைக்கதிரவனின் வண்ணக்கீற்று
காற்றினிலே தவழும் குளுமை
கடவுளின் படைப்பினிலே
கணக்கிலடங்கா அதிசயங்கள்!

கடற்கரை

கடற்காற்று காலம் கடந்த காற்று
காதல் வயப்பட்டோர்
காசு பணமற்றோர
காரிகையோடு கைகோர்ப்போர்
காரில் கானம் கேட்போர்
காலாற நடப்போர்
காவியம் படைப்போர்
காற்று வாங்க வருவோர்
கன்னியர் காளையர்
கடலோடும் மணலோடும்
கலந்தாடும் சின்னஞ்சிறியோர்
இவையாவும் இங்குண்டு
இரவென்ன பகலென்ன!

புதன், 22 நவம்பர், 2017

மனிதன் மாறவில்லை

மதங்களின் பெயரால்
மண்ணின் பெயரால் 
மதிகெட்ட மனிதர் 
மற்றும் சாதி மொழி நிறம்
பிரிவினை பார்த்த காலம்
இனியில்லை என்று
இறுமாந்திருந்தேன்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
நடந்திடும் கொடுமைகள்
கண்ணுக்கும் காதுக்கும்
சுடும் நெருப்பாய் இன்னமும்
திருந்தவே மாட்டாயா ?
திமிர் பிடித்த மானிடா !
மிருகங்கள் கூட மாறிடும் ஆனால்
உன்னால் மாறிட இயலாதா ?
விட்டு விடு இரத்தம் சிவப்பே
இறந்தபின் ஆறடி நிலமே
அனலின் அழியும் உடலே
உணவிடு உதவிடு
வறுமை போக்கு 
வளம் பெருக்கு
வாழு வாழவிடு !

வெள்ளி, 17 நவம்பர், 2017

உள்ளம் கொதித்தென்ன

விட்டு விடுங்கள் அவளை
உறங்கட்டும்
உன்மத்தர்கள் வாழும் நாட்டில் 
உன் போன்றோர் வாழ்தல் அரிது
உடல்கூறு படிப்பு உனக்கில்லை என்றார்
உன் உடலைக் கூறு போட்டார்
உள்ளம் கொதித்தென்ன
உன்னுயிர் மீளுமா
ஆட்சிக் கட்டிலில் அசையாத பிணங்கள்
இருக்கும்.
சுடுகாட்டு வாழ்க்கை எமது
உயிருள்ள பிணங்கள் நாங்கள்
வாழ்ந்திருப்பது இன்னும் ஏனோ ?

வாழ்ந்த நாட்களும் வரும் நாட்களும்

நட்பென்ற இலக்கணமே நாமென்றானோம்
பறந்து திரிந்த பறவைகள் கூடுகள் அடைதல்போல கூடினோம்
வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டோம்
கருத்தில் முரணென்றாலும் கண்ட நட்பு கரும்பினும் இனியது
வாலிபர் என்றும் நாங்கள் வயதொரு எண்ணே
வலிகள் உள்ளத்தின் ஆழத்தில் இருத்தி இறுக்கப் பூட்டி வைப்போம்
வாழ்ந்த நாட்களும் வரும் நாட்களும்
இனிய வரிகளே எங்கள் புதினமதில்
இனி வரும் காலங்களும் எங்களின் இளமைக் காலங்களே
மார்க்கண்டேயர்கள் நாங்கள் வரம்பெற்று வந்தோம் !