சனி, 6 டிசம்பர், 2014

வாழ்க்கை ஒரு நீரோடை (Life is a Stream)

வாழ்க்கை என்பது ஒரு அனுபவ புத்தகம் என்பது உண்மை. அப்புத்தகத்தை மற்றவரோடு பகிர்ந்து கொண்டால் இருவிதமான மன நிறைவு ஏற்படும். ஒன்று மனத்தில் உள்ள பாரத்தை இறக்கி வைத்தல் மற்றொன்று நமது அனுபவம் மற்றவருக்கு பாடமாகவோ வழி காட்டுதலாகவோ இருக்க வாய்ப்பு.

ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள மகானாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் அனுபவங்கள் வேறுபடும். எனது அனுபவங்கள் என்னோடு அழிந்து விடாமல் யாரோ ஒருவருக்கு எந்த வகையிலாவது உதவுமாயின் இந்த பதிவுக்கு ஓர் அர்த்தம் பிறந்து விடும்.

பசுமையான எண்ணங்களை அவ்வப்போது மனதில் தோன்றும் விதமாகவே பதிவு செய்யலாம் என்று தோன்றுகிறது. பதிவு செய்வது முழுமையாக முடிந்த பின்னால் வேண்டுமாயின் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று மனதில் பட்டதால் அவ்வாறே செய்வதற்கு முனைந்துள்ளேன். 


வாழ்க்கையின் ஒவ்வொரு பத்து வருடங்களையும் ஒரு பகுதியாகக் கொண்டு இந்தத் தொடரை அமைக்கலாம் என்று எண்ணியுள்ளேன்.

என்னுடைய முதல் பத்து வருடங்களாவன 1956 முதலாய் 1966 வரையிலான பகுதியாகும்.

இப்பகுதியின் முதற் பாதி குழந்தைப் பருவமாதலால் நம்மில் பலருக்கும் நினைவு கூர்தல் அரிதாகும். இரண்டு நிகழ்வுகள் பனி படர்ந்தது போல் நினைவில் உள்ளது. ஒன்று எனது தாய் வழி தாத்தாவின் இளைய சகோதரர் காவல் துறை உயர்பதவியில் பணி புரிந்தவர், அன்னாரின் இறுதி ஊர்வலம். மற்றொன்று எனது நான்காவது வயதில் தண்ணீர் தொட்டி ஒன்றில் நான் தவறி விழுந்தது, காது கேளாத என் அன்னை, அருகில் துணி துவைத்து கொண்டு இருந்தவர் தற்செயலாய் பார்த்து என்னைக் காப்பாற்றியது.

ஐந்து வயதிலே பள்ளியில் பெற்றோர் சேர்த்தும் அழுது புலம்பி பள்ளிக்கு செல்வதை தவிர்த்து, ஆறாம் வயதில் அதுவும் காலாண்டு தேர்வு முடிந்த பிறகே ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தது. இதனாலேயே பிற்காலத்தில் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்ற காலங்களில் நான் மற்ற மாணாககரை விட ஒரு வயது மூத்தவனாய் இருக்கும் நிலை உண்டானது.

1962ல் முதல் வகுப்பு மாணவனாய் TELC துவக்கப் பள்ளியில் சென்னை, கீழ்பாக்கத்தில், நடத்தப்பட்டுவந்த கிருத்துவமதம் சார்ந்த பள்ளியில் சேர்க்கப் பட்டேன். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஏற்றாற்போல் முதல் வகுப்பு முதலே வகுப்பில் முதல் மாணவனாய் திகழ்ந்தேன். அதனால் வகுப்பாசிரியை அவர்களுக்கு பிடித்தமான மாணவனாகவும் ஆனேன். இப்பள்ளி ஒரு நடுத்தர வகுப்பினர் பயிலும் பள்ளியாகும்.

1962ல் மே மாதத்தில் விடுமுறைக்கு அம்மா வழி பாட்டி வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் பிறந்தாள் எனது தங்கை. தங்கையின் பிறப்பை பாட்டிக்கு தெரிவித்தவனே நான் தான், அக்காலத்தில் பெரும்பாலும் குழந்தை பிறத்தல் வீடுகளிலேயே நடைபெற்றது. சுக பிரசவமே பெரும்பாலும், சிக்கலான பிரசவங்கள் மருத்துவச்சியின் உதவியுடன் நடை பெற்றது. மருத்துவமனை பிரசவங்கள் மிகக் குறைவே.

1965ல் தாய் வழிப் பாட்டனார் அமரத்துவம் அடைந்தார். அவர் இருக்கும் வரைக்கும் எல்லோரது வாழ்விலும் சிம்மம் போல் திகழ்ந்தார். எனது தாய் வழியில் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் இரண்டு இளய சகோதரர்கள். தந்தை வழியில் மூத்த இரண்டு சகோதரர்கள். 

எனது தாயின் உடல் நிலை சில காலமாகவே மன நலம் குன்றியதாய் மாறியதும் இப்பகுதியில் தான், அவர் அவ்வாறு மாறக் காரணம் என் தந்தையே எனக் கூறுவர்.

துவக்க நிலை வகுப்புகள் தோறும் முதல் மாணாக்கனாக திகழ்ந்தேன். பள்ளி நாடகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வேடமணிந்து  நடித்த ஒரே மாணாக்கானாகவும், சக மாணவர்களின் பொறாமைக்கும் ஆளானேன். அவ்வாறு நாடகமொன்றில் நடித்துக்கொண்டு இருந்தபோது ஒரு மாணவனின் கல்லெறி பட்டு கண்ணுக்கு மிக அருகினில் சிறிதொரு காயமும் பட்டது.