வியாழன், 13 ஏப்ரல், 2017

என்று தணியும் எங்கள் தாகம்

ஹே விளம்பி ஆண்டாம் பிறப்பது நாளை
நீ விளம்பு இன்று நமது நிலை என்ன
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் சரியில்லை
அதனால் அடுத்தடுத்து போராட்டம்
அரசியல் இன்று அடிமட்டத்தில் ஆர் கேட்பார்
அடுத்த வேளை கஞ்சிக்கே வழியில்லை
ஆனால் அவனால் தான் நீ இன்று
அரிசிச் சோறு நித்தமும் உண்கின்றாய்
வீதியில் இறங்கி போராடும் நிலை
விளக்கம் கேட்க மறுக்கும் தலைவர்
கணக்கிட்டே கடன் வாங்கி கட்டாத
கயவர்கள் நாடு விட்டு வேற்று நாட்டில்
வானம் பொய்த்து வயலும் காய்ந்து
வயிற்றுக்கு வகையாய் உணவு எங்கே
இவன் வாங்கிய கடன் சிறிதளவே
ஆனாலும் அச்சுறுத்தல் அதிகம்
குடி குடியை கெடுக்கும் விளம்பரத்தில்
குடியைத் தடுக்க கோரும் பெண்டிர்
குலக் கேடியின் கரத்தில் குத்துப்படுவர்
குடியரசா அன்றி கொடுங்கோல் அரசா
தலைவன் இல்லாத தவிக்கும் நாடாயிற்றா
தாங்காது இனிமேலும் தவிக்கிறது உள்ளம்
எழுச்சிப் போரில் எம் இளைஞன் இன்று
என்று தணியும் எங்கள் தாகம்